மாமல்லபுரம் புராதன சின்ன பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு பேரூராட்சி நடவடிக்கை
" alt="" aria-hidden="true" />

மாமல்லபுரம், 

 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் திணறி வருகின்றனர்.



 



சில மாதங்களுக்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால் படிப்படியாக மாமல்லபுரத்தில் சீன பயணிகள் வருகை குறைந்தது. அவர்கள் இந்தியா வருவதற்கான விசாவையும் மத்திய அரசு ரத்து செய்தது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று 2-வது நாளாக மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன சின்ன பகுதிகள் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

 

மாமல்லபுரம் நகரம் முழுவதும் முழு அடைப்பு போல நேற்று காட்சி அளித்தது.

 

கிருமி நாசினி

 

அனைத்து நட்சத்திர ஒட்டல்கள், பண்ணை விடுதிகள் மூடப்பட்டு, நீச்சல் குளங்களும் மூடப்பட்டதால் அந்த பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. உணவகங்களிலும் மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது.

 

நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதன சின்ன பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

 

மேலும் கடற்கரை சாலையில் பயணிகள் வராததால் அங்குள்ள கடைகளும் 2-வது நாளாக நேற்று மூடப்பட்டது. இதனால் போதிய வருமானம் இன்றி சாலையோர கடை வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.